வீர விளையாட்டுகளில் என்றும் பெருவிருப்பமுடையவர் பழந்தமிழர். மற்போரிடல், ஏறுதழுவுதல், வேட்டையாடுதல், மூழ்கி மணல் எடுத்தல் என்பன பழமை வாய்ந்த ஆடவர் விளையாட்டுகள். முற்காலத்தில் மற்போரில் வல்ல மல்லர், மன்னர்களால் மதிக்கப் பெற்றனர். களத்தில் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்க, தருக்கும் செருக்கும் நிரம்பிய ஆமூர் மல்லனுக்கும் வீரமூம் தீரமும் வாய்ந்த நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர வீளையாட்டைப் புறநானூறு என்னும் சங்க இலக்கிய நூல் வருணிக்கின்றது.
முல்லை நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது. முரசு அதிர, பம்பை முழங்க தொழுவிலிருந்து கொழுமைமிக்க காளைகள் ஒவ்வொன்றாக வெளியே ஓடிவரும். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்த வீரர்கள் காளையின் கொம்பைப் பிடித்து அதன் கொட்டத்தை அடக்குவர். வாலைப் பிடித்தல் தாழ்வு என்பது தமிழர் கொள்கை. பல்லோர் சூழ்ந்து நிற்க கிணற்றுக்குள் துடுமெனப் பாய்ந்து குதித்து மணல் எடுத்து
வருதல் ஒருவகை வீர விளையாட்டாகக் கருதப்பட்டது.
காலம் செல்லச்செல்ல அதற்கேற்ப விளையாட்டுகளின் தன்மையும் போக்கும் மாறியுள்ளன. பண்டைய ஏறுதழுவுதல் விளையாட்டு இன்று சல்லிக்கட்டாகவும், மஞ்சுவிரட்டாகவும் அறியப்படுகின்றன. அன்று ஏறுதழுவியவரையே மகளிர் விரும்பி மணந்தனர். இன்று அவ்விளையாட்டானது பணமுடிப்பு, பரிசுப்பொருள்கள் பெறுதல், பலர் சேர்ந்து மாடு விரட்டல் என மாறிவிட்டது. தமிழரின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்றாகச் சிலம்பாட்டம் வளர்ந்து வருகிறது. நிலத்திலிருந்து ஓர் ஆளின் உயரம் வரை இருக்கும் தடியைச் சுழற்றி ஆடும் ஆட்டமே சிலம்பாட்டமாகும்.
உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டான கபடிக்கு தனியிடம் கிடைத்துள்ளது. கபடி விளையாடும்போது பாடிக் கொண்டேவிளையாடிவது நம் மூதாதையர் வழக்கம். ஆனால், கபடிப் போட்டியில் பாடும் மரபு மறைந்து விட்டது. ஊர்த்திருவிழாக்காலங்களில் வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், மஞ்சள் நீர் ஊற்றுதல் ஆகிய விளையாட்டுகளை இன்றைக்கும் சிற்றூர்களில் காணலாம்.