Monday, 23 February 2015

பல்லாங்குழி


பல அழகிய குழிகளை (பல்+அம்+குழி) வைத்து இந்த விளையாட்டு ஆடப்படுவதால் பல்லாங்குழி என்ற பெயர் பெற்றிருக்கலாம் என்பர். பனினாங்குழி, பன்னாங்குழி, பரலாடும்குழி, பாண்டி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது இரண்டு அல்லது மூன்றுபேர் விளையாடும் விளையாட்டு. உழவர் பெண்கள் தரையில் குழிகளை அமைத்து விளையாடிய செய்தி காணப்படுகிறது. மரப்பலகைகளில் குழிகளை ஏற்படுத்திப் பல்லாங்குழியாகப் பயன்படுத்தியுள்ளனர். வெண்கலத்திலான பல்லாங்குழிகளும் காணப்படுகின்றன. கற்கள், புளியமுத்துகள், சோழிகள் ஆடுகருவிகளாகப் பயன்படுகின்றன. பசுப்பாண்டி, எதிர்ப்பாண்டி, இராஜாப்பாண்டி, காசிப்பாண்டி, கட்டும்பாண்டி, சீதைப்பாண்டி, சரிப்பாண்டி என்ற வகைகளில் விளையாடப்படுகின்றன. முதலில் விளையாடுபவர் தம் பக்கம் உள்ள குழி வரிசையில் ஏதேனும் ஒன்றினைப் பிரித்து வலப்புறத்திலிருந்து ஒவ்வொரு குழிக்கும் ஒவ்வொரு கல்லாகப் போட்டு வருவர். முடிந்தவுடன் முடிந்த குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களைப் பிரித்துப் போட்டு வரவேண்டும். இறுதியில் முடிந்த குழிக்கு அடுத்த குழி வெறுமையாக இருப்பின் அதற்கடுத்த குழியிலுள்ள கற்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து எதிர் வரிசையில் உள்ளவர் பிரித்து விளையாடுவார். கற்களைப் பிரித்தபின் உள்ள குழியில் நான்கு கற்கள் சேர்ந்துவிட்டால் பசு என்று கூறி, அவரவர் குழி வரிசையில் உள்ளதை அவரவர் எடுத்து வைத்துக் கொள்வர். கற்களெல்லாம் ஒருவரிமே அதிகம் சேர்ந்துவிட்டால் அடுத்த ஆட்டத்தில் தங்கள் குழிகளில் கற்களைப் போடுவர். கற்களை நிரப்ப முடியாதவர் தொக்கம் என்று சொல்லி சிறு துரும்பினைக் குழிகளில் போடுவர். கற்கள் நிரப்பிய ஏதாவது ஒரு குழியில் அய்ந்துக்கும் குறைவாக இருப்பின், பிள்ளைக்குழி என்பர். அடுத்த நிலையில் குறைவாகக் கல் வைத்திருப்பவர் நிலை, கஞ்சி காய்ச்சுதல் அல்லது கூழ்க் காய்ச்சுதல் எனப்படுகிறது. இந்த நிலையிலும் தோற்றுக் கொண்டே வருபவர் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. கஞ்சி காய்ச்சுவதற்குக்கூட கல் இல்லாத நிலையை அடைபவர் தோற்றவராகக் கருதப்படுவர்.

No comments:

Post a Comment