Wednesday, 25 February 2015

ஒத்தையா ? இரட்டையா ?


தங்களிடம் உள்ள புளியமுத்துகளைக் கையில் மறைத்து வைத்துக்கொண்டு எதிரில் இருப்பவரிடம் ஒத்தையா? இரட்டையா? என்று கேட்பர். ஒத்தை என்று சொன்னால், கையில் உள்ள முத்துகளை இரண்டிரண்டாகப் பிரித்து வைப்பர். ஒன்று மட்டும் தனித்து வந்தால் எதிரில் உள்ளவரிடம் கையிலிருந்த அனைத்து முத்துகளையும் கொடுத்துவிட வேண்டும். இரட்டையாக இருப்பின், கையிலிருந்த முத்துகளின் எண்ணிக்கையை எதிரில் இருப்பவர் கொடுக்க வேண்டும். சில நேரங்களில் வெறுங்கையினை வைத்துக் கேட்டால் ஊமைக்கை என்று சொல்ல வேண்டும். இல்லையெனில் 10 முத்துகள் தண்டனையாகத் தரவேண்டும்.

Monday, 23 February 2015

பல்லாங்குழி


பல அழகிய குழிகளை (பல்+அம்+குழி) வைத்து இந்த விளையாட்டு ஆடப்படுவதால் பல்லாங்குழி என்ற பெயர் பெற்றிருக்கலாம் என்பர். பனினாங்குழி, பன்னாங்குழி, பரலாடும்குழி, பாண்டி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது இரண்டு அல்லது மூன்றுபேர் விளையாடும் விளையாட்டு. உழவர் பெண்கள் தரையில் குழிகளை அமைத்து விளையாடிய செய்தி காணப்படுகிறது. மரப்பலகைகளில் குழிகளை ஏற்படுத்திப் பல்லாங்குழியாகப் பயன்படுத்தியுள்ளனர். வெண்கலத்திலான பல்லாங்குழிகளும் காணப்படுகின்றன. கற்கள், புளியமுத்துகள், சோழிகள் ஆடுகருவிகளாகப் பயன்படுகின்றன. பசுப்பாண்டி, எதிர்ப்பாண்டி, இராஜாப்பாண்டி, காசிப்பாண்டி, கட்டும்பாண்டி, சீதைப்பாண்டி, சரிப்பாண்டி என்ற வகைகளில் விளையாடப்படுகின்றன. முதலில் விளையாடுபவர் தம் பக்கம் உள்ள குழி வரிசையில் ஏதேனும் ஒன்றினைப் பிரித்து வலப்புறத்திலிருந்து ஒவ்வொரு குழிக்கும் ஒவ்வொரு கல்லாகப் போட்டு வருவர். முடிந்தவுடன் முடிந்த குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களைப் பிரித்துப் போட்டு வரவேண்டும். இறுதியில் முடிந்த குழிக்கு அடுத்த குழி வெறுமையாக இருப்பின் அதற்கடுத்த குழியிலுள்ள கற்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து எதிர் வரிசையில் உள்ளவர் பிரித்து விளையாடுவார். கற்களைப் பிரித்தபின் உள்ள குழியில் நான்கு கற்கள் சேர்ந்துவிட்டால் பசு என்று கூறி, அவரவர் குழி வரிசையில் உள்ளதை அவரவர் எடுத்து வைத்துக் கொள்வர். கற்களெல்லாம் ஒருவரிமே அதிகம் சேர்ந்துவிட்டால் அடுத்த ஆட்டத்தில் தங்கள் குழிகளில் கற்களைப் போடுவர். கற்களை நிரப்ப முடியாதவர் தொக்கம் என்று சொல்லி சிறு துரும்பினைக் குழிகளில் போடுவர். கற்கள் நிரப்பிய ஏதாவது ஒரு குழியில் அய்ந்துக்கும் குறைவாக இருப்பின், பிள்ளைக்குழி என்பர். அடுத்த நிலையில் குறைவாகக் கல் வைத்திருப்பவர் நிலை, கஞ்சி காய்ச்சுதல் அல்லது கூழ்க் காய்ச்சுதல் எனப்படுகிறது. இந்த நிலையிலும் தோற்றுக் கொண்டே வருபவர் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. கஞ்சி காய்ச்சுவதற்குக்கூட கல் இல்லாத நிலையை அடைபவர் தோற்றவராகக் கருதப்படுவர்.

நொண்டி விளையாட்டு


எத்தனைபேர் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். சாட்பூட் த்ரீ முறையில் நொண்டியடித்துவர ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர். ஓடுபவர்கள் குறிப்பிட்ட வட்டத்திற்குள் ஓடவேண்டும். நொண்டியடித்து வருபவர் ஓடுபவர்களைத் தொட வேண்டும். தொடர்ந்து நொண்டியடிக்க முடியாவிட்டால் நடுவிலுள்ள சிறு வட்டக் கோட்டினுள் காலூன்றி இளைப்பாறிக் கொள்ளலாம். இரண்டு மூன்று வகைகளில் நொண்டி விளையாடப்படுகிறது.

Sunday, 22 February 2015

ஆடுபுலி ஆட்டம்


பதினைந்தாம் புலி எனவும் அழைக்கப்படு கிறது. 15 காய்களை (ஆடுகள்) ஒருவரும் 3 காய்களை (புலிகள்) இன்னொருவரும் வைத்து விளையாடுவர். புலியின் காய்களை அங்குமிங் கும் நகர்த்த முடியாதவாறு சுற்றிக் காய்களால் அடைத்துவிட்டால் ஆடாக இருப்பவர் வென்றவராகக் கருதப்படுவார். சுற்றிவரும் காய்களைக் கவனித்துக் கொண்டு அடைபடாமல் தப்பித்து எதிரியின் காய்களை வெட்டி முடித்துவிட்டால் புலியாக இருப்பவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார்.

தாயம்


மகளிரால் பெரிதும் விரும்பப்படும் இந்த விளையாட்டில் குறைந்தது 2 பேரும் கூடுதலாக 4 பேரும் விளையாடலாம். இதில் விழும் எண்களைத் தெரிந்து கொள்வதற்கு புளிய முத்துகள், சோழிகள், தாயக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. புளியமுத்து எனில், ஒரு பக்கத்தினைத் தரையில் உரசித் தேய்த்துக் கொள்வர்.நான்கு கட்டத் தாயம், எட்டுக்கட்டத் தாயம், பத்துக் கட்டத் தாயம், தஞ்சாவூர்க் கட்டம், குரங்காட்டம் என 5 வகைப்படுகிறது.

Friday, 20 February 2015

கட்ட விளையாட்டு


கட்டத்தினை வரைந்து காய்களை நகர்த்தி விளையாடியதால் கட்ட விளையாட்டு எனப்பட் டது. இது 3 வகைகளில் விளையாடப்படுகிறது. முதல் வகையானது மூன்று கோடுகளால் (நீளத்திலும், அகலத்திலும்) இரண்டு கட்ட வரிசைகள் அமையும்படி கட்டங்களை வரைந்து விளையாடுவது. இது, இரண்டுபேர் விளையாடும் விளையாட்டு. இருவரும் எதிர் எதிரே உட்கார்ந்து கொள்வர். ஒவ்வொருவருக்கும் 3 காய்கள் உண்டு. காய்களாக சிறு கற்களையோ அல்லது குச்சிகளையோ பயன்படுத்துவர்.

கட்டத்தில் 9 இடங்கள் (புள்ளிகள்) காய் வைக்க இருக்கும். ஒருவர் ஒரு புள்ளியில் காய் வைத்தால் மற்றவர் இன்னொரு புள்ளியில் காய் வைப்பர். இருவரும் மூன்று காய்களை வைத் ததும் ஆறு இடங்கள் நிறைந்துவிடும். மீதியிருக் கும் 3 இடத்தில் காய்களை அங்குமிங்கும் நகர்த்தித் தங்கள் காய்களை ஒரே வரிசைக்குக் கொண்டுவர முயல்வர். அவ்வாறு ஒரே வரிசைக் குக் கொண்டு வந்துவிட்டால் வெற்றி பெற்றதாகப் பொருள். தொடர்ந்து விளையாடி வெற்றிகளைக் குவிப்பர்.

மூலைக்கோடுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டு மய்யத்திற்குக் காயினை நகர்த்துவதற்கு மூலைக் கோடுகளும் பயன்படுவது இன்னொரு முறை. மூலைக்கோட்டில் வரிசையாகக் காய்களை நகர்த்தி ஒரே நேராகக் கொண்டு வந்தாலும் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். நான்கு கோடுகளின் உதவியால் மூன்று கட்ட வரிசைகள் அமையுமாறு கட்டம் வரையப்படும். விளையாடுபவர் ஒவ்வொருவரும் 4 காய்களை வைத்திருப்பர்

வண்டி உருட்டுதல்


பனை நுங்கின் மட்டைகளை எடுத்துக் கொள்வர். ஒரு சிறு காம்பின் இரு நுனிகளிலும் 2 நுங்கு மட்டைகளை இணைத்துவிடுவர். பின்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ள கம்பின் வழியே (கவட்டைக் கம்பு) தள்ளினால் வண்டி உருண்டு ஓடும்.

குச்சி விளையாட்டு


குச்சிகளைக் குறிப்பிட்ட அளவில் எடுத்துக் கொள்வர். குறிப்பிட்ட எல்லை நிர்ணயித்து கட்டம் வரைந்து ஒன்றாகச் சேர்த்து கட்டத்திற்குள் போட வேண்டும். ஒரு குச்சியைக் கையில் வைத்துக் கொண்டு தனித்திருக்கும் குச்சிகளை எளிதில் எடுத்துவிடுவர். பின்பு சேர்ந்திருக்கும் குச்சிகளை எடுப்பர். அப்போது அருகிலிருக்கும் குச்சிகள் ஆடாமல் அசையாமல் எடுக்க வேண்டும். அசைந்தால் அலுக்கி எனப்படும். அலுக்கினால் அடுத்து ஆட இருப்பவர் விளையாட வேண்டும்.

Wednesday, 4 February 2015

சின்னம் தேர்ந்தெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பை அளிக்கவும் -1





சின்னம் தேர்ந்தெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பை அளிக்கவும்
============================================================

நாட்டுப்புற விளையாட்டுகள் மேம்பாட்டுக் கழகத்திற்கு ஏற்கனவே  ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து இருந்தோம் அதில் சிலருக்கு கருத்து வேறுபாடு இருந்ததால் மேலும் மெருகேற்றப்பட்ட சின்னத்தை வடிவமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இதற்காக மூன்று  சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதில் எதை தேர்ந்தெடுக்கலாம் என்று கருத்துக்களை கூறலாம். கருத்துகள் அடிப்படையில் சின்னம் தேர்ந்தெடுக்கப்படும். 

                                                                                                                                                       நிர்வாகம்