Saturday, 27 December 2014

சின்னம் தேர்ந்தெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பை அளிக்கவும்



சின்னம் தேர்ந்தெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பை அளிக்கவும்
============================================================

நாட்டுப்புற விளையாட்டுகள் மேம்பாட்டுக் கழகத்திற்கு ஒரு சின்னத்தை தேர்ந்தெடுக்கபட உள்ளது. இதற்காக இரு சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதில் எதை தேர்ந்தெடுக்கலாம் என்று கருத்துக்களை கூறலாம். கருத்துகள் அடிப்படையில் சின்னம் தேர்ந்தெடுக்கப்படும். 

                                                                                                                                  நிர்வாகம்

Sunday, 14 December 2014

சில்லு விளையாட்டு



தட்டையான சிறு சில்லை அரங்கத்தில் போட்டு, அதனைக் காலால் மிதித்து, அரங்கத்துக்கு வெளியே எத்தித்தள்ளி, அதனை மிதித்து விளையாடுவது சில்லு விளையாட்டு எனப்படும். உடைந்த மண்பாண்டத்து ஓட்டில் சுமார் மூன்று அங்குல அளவு விட்டமுள்ள சிறு ஓட்டினைச் சில்லு என்பர். சில்லு விளையாட்டு விளையாடும் அரங்கு தரையில் சில்லால் கோடு கிழித்து அமைக்கப்படும். விளையாடும் அரங்கிலிருந்து சுமார் 10 அடி தொலைவில் ஒரு உத்திக்கோடு வரையப்படும்.

1. உத்திக் கோட்டிலிருந்து அரங்கின் முதல் கட்டத்தில் சில்லை எறிவர். எறியும் சில்லு அரங்கக் கோட்டில் படாமல் கிடக்க வேண்டும். கோட்டில் படக்கூடாது, கோட்டில் பட்டால் அடுத்தவர் ஆடுவார்.

2. உத்திக் கோட்டிலிருந்து நொண்டி அடித்துக்கொண்டு சென்று அரங்கில் கிடக்கும் சில்லை அதேநொண்டிக் காலால் ஒரே தவ்வில் மிதித்துப் பின்னர் அதே காலால் சிலலை அரங்கிற்கு வெளியே எத்தி, ஒரே தவ்வில் அதே நொண்டிக் காலால் மிதித்தால் பழம். பிழை நேர்ந்தால் அந்த ஆட்டப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படுவார். எந்த ஆட்டப் பகுதியில் பிழை நேர்ந்ததோ அந்த ஆட்டப் பகுதியிலிருந்து அடுத்த ஆட்டமுறை வரும்போது ஆட்டத்தைத் தொடரலாம்.

3. பழம் பெற்றால் அடுத்த கட்டத்தில் இதேப்போல் ஆட்டம். முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என வரிசை முறையில் சில்லு எறிந்து ஆடி முடித்தபின் மச்சு ஆட்டம்.

மச்சு ஆட்டம்

உத்தி கோட்டிலிருந்து அரங்கு வரையில் நொண்டி அடித்துக்கொண்டு சென்று, அரங்கின் முதல் கட்டத்தில் இரு கால்களையும் ஊன்றிக்கொண்டு நிற்பர். ஆடிய சில்லைத் தலையில் வைத்துக்கொண்டு தன் கண்களை தானே இரு கைகளாலும் பொத்திக்கொண்டு இரண்டு தப்படி வைத்ததும் சரியா, தப்பா என்று கேட்டுக்கொண்டே ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி நடந்து செல்வர். கோட்டை மிதித்திருந்தால் தப்பு, சரி என்றால் அடுத்த தப்பிகள். கடைசி கட்டத்தில் சரி என்றதும் தலையிலுள்ள சில்லைக்குனிந்து தரையில் போடவேண்டும். பிறகு கண்ணைக் திறந்துக்கொண்டு அந்தச் சில்லை மிதிக்க வேண்டும். மிதிக்கும் இந்த இடத்தை மலை என்று கூறுவர். இங்கு நின்றுகொண்டு ஆனையா, பூனையா என்று கேட்டபர். மற்றவர் ஆனை என்று சொன்னால் ஆனை தன் கையால் தண்ணீரை உறிஞ்சித் தன் தலைக்கு மேல் கையை உயர்த்தி நீரை விசிறுவது போலச்சில்லை அரங்குக்கு வெளியே பின்பக்கமாக எறிந்துவிட்டுக் கட்டங்களில் நடந்துவந்து கட்டத்திலிருந்து தவ்வி மிதிக்க வேண்டும்.

சில்லை மிதித்து விட்டால் அரங்கின் ஓரத்தில் ஒரு கட்டம் போட்டு அதனைக் தன் மச்சு என்று வைத்துக்கொள்ளலாம். அடுத்த ஆட்டத்தில் நொண்டி அடித்துக்கொண்டு செல்லும்போது தன் மச்சில் தான் இரண்டு கால்களையும் ஊன்றிக்கொள்ளலாம். அதிக மச்சு கட்டியவர் வென்றவர் ஆவார். பூனை என்று மற்றவர் சொன்னால் குனிந்து சில்லை எறிந்து அவ்வாறே மிதிக்க வேண்டும். மேல்காலின் மேல் சில்லை வைத்துக்கொண்டு கண்ணைத்திறந்துகொண்டு நடத்தலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Tuesday, 2 December 2014

மஞ்சள் நீர் தெளித்தல்



தோற்றம் மற்றும் வளர்ச்சி :
பண்டைய காலம் தொட்டே நீர் விளையாட்டுகள் இருந்ததற்கான சான்றுகள் தமிழ் இலக்கிய வாயிலாக கிடைகிறது. பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற வண்ணங்கள் கலந்த நீரை ஆண்கள் மீது இடைவிடாமல் தெளித்து விளையாட்டியதாகத் தெரிகிறது. இதற்கு பரிபாடல் வரிகள் சான்றாக அமைகிறது.

“தன்புனல் ஆடும் தகைமிகு போர்க்கண் 
... ... ... ...

நொய்மான் சிவிறியர் நீர்மணக்கோடினர் 

வெண்கிடை மிதவையர் நான்கிடைத் தேரீனர்”

                                                                                                          என்ற வரிகளிலிருந்து 

“நேய்ந்தோர் நிறவரக்கின் நீரெக்கி யாவையும் 

முத்துநீர்த் சாந்தடைந்த மூஉய்த் தத்தி” 

                                                                  என்ற வரிகளின் வாயிலாகவும் அறியலாம்.

இவ்வகையான விளையாட்டுக்கள் பெரும்பாலும் விழாகாலங்களிலும் நிகழ்த்தப்படுகின்றன. இவ்விளையாட்டு தமிழகத்தில் இன்னும் சில கிராமங்களில் விளையாடப்பட்டு வருகிறது. மஞ்சள் நீரை பெண்கள் அனைத்து ஆண்கள் மீதும் தெளிப்பதல்ல, தான் திருமணம் செய்யும் முறை அல்லது விரும்பி மணமுடிக்கப்போகும் ஆணின் மீது தான் தெளித்து மகிழ்வர். 

பெயர்க்காரணம் :
மஞ்சள் நீர் தெளிப்பதால் இந்த விளையாட்டிற்கு மஞ்சள் நீர் தெளித்தல் என்ற பெயர் வந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

விதிமுறைகள் :
இந்த விளையாட்டிற்கு விதிமுறைகள் எதுவும் கிடையாது. ஆனால் தான் விரும்பும் ஆண்கள் மீது மட்டுமே மஞ்சள் நீர் தெளிப்பது மிகச்சிறந்த பண்பு. இதையே விதிமுறையாக கூறலாம்.இவ்விளையாட்டு மட்டுமே பெண்களின் புற விளையாட்டாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பயன்கள் :
இவ்விளையாட்டின் வாயிலாக உறவு முறைகள் தெரிய வரும். மஞ்சள் கிருமி நாசினி என்பதால் மருத்துவப் பயனும், மனமகிழ்ச்சியும் இவ்விளையாட்டின் முக்கிய பயன்களாக கருதலாம்.

விளையாட்டு கலை



விளையாட்டுக்கள், ஓரினத்தின் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துவன. விளையாட்டில் சிறுவர்,சிறுமியர், இளையோர் என எல்லா நிலையில் உள்ளோரும் ஈடுபடுகின்றனர். உடல் திறன் வளர்க்க, உள்ளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, மனம் மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டுகள் துணை புரிகின்றன. விளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிடுதலாகும். உடல், உள்ள ஆற்றல்களை வெளியிடவும், எதிர்பாராத தோல்விகளை எதிர் கொள்ளவும் மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது. விளையாட்டு வழியாகப் பட்டறிவும், போராட்டத்திற்கு விடை காணும் திறனும் பெற முடிகிறது.